Type Here to Get Search Results !

சகல நோய்களை தீர்க்கும் சஞ்சீவினி சாத்துகுடி ஜூஸ்





எல்லா பருவ காலங்களிலும் கிடைக்கிற பழம்தான் சாத்துகுடி. சாத்துகுடி என்றவாறு தமிழில் அழைக்கப்படுவதற்கு ஏற்ப அதன் சாற்றை குடிப்பதற்கு அனைவரும் விரும்புவர். அந்தளவிற்கு பழச்சாறு என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது சாத்துகுடி ஜூஸ்தான். சாத்துக்குடியின் தோற்றம் தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாதான் என அறியப்படுகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அன்டை நாடுகளிலும் சாத்துகுடி ஜூஸ் வீதிகள் தோறும் விற்பனை செய்யப்படுகிறது. வெப்பம் நிறைந்த பகுதிகளில் குளிர்ச்சியை தரும் பழமாக சாத்துகுடி முதலிடம் பிடிக்கிறது.
இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இதன் பெயர் ‘’மொசம்பி’’ என்று அழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவில் கேரளாவில் மொசம்பி எனவும், ஆந்திராவில் ‘’பதாயி’’ என்றும் தமிழகத்தில் சாத்துகுடி என்றும் பெயர் பெற்றுள்ளது. ஸ்வீட் லெமன் என்பதும் சாத்துகுடியின் ஒரு பெயர்தான். ஒரு பெரிய எலுமிச்சை போன்று இனிப்புடன் திகழ்வதால் ஆங்கிலேயர் ஸ்வீட் லெமன் என்று அழைக்கின்றனர்.

எப்படி அழைத்தாலும் சாத்துகுடி பசுமையுடன் காட்சியளித்து அருந்துகிறவர்களுக்கு ஆரோக்கியம் மற்றும் செழுமை தருகிறது. சாத்துகுடி பழத்தில் அபரிமிதமான விட்டமின்-சி சத்து நிறைந்துள்ளது. உடலில் தேங்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது. சாத்துகுடியில், நார்சத்து  நிறைந்துள்ளது. சிறந்த செரிமானம் மற்றும் வயிற்று கோளாறுகளை நீக்க உதவுகிறது. எலும்புகளுக்கு வலுவூட்டுவதுடன், வயதான தோற்றம் ஏற்படுவதையும் தடுக்கிறது.

சாத்துகுடியில் பொட்டாசியம், பாஸ்பரஸ், மினரல்கள் உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் சாத்துகுடி ஜூஸ் குடிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெறமுடியும். உடலில் புதிய ரத்தம் விருத்தியாக தினம் இரண்டு சாத்துகுடி பழச்சாறு அருந்தவேண்டும். உடல் அசதி பறந்துவிடும். அதனால்தான், நோயுற்றவர்களுக்கு சாத்துகுடி ஜூஸ் அருந்த தரப்படுகிறது. மேலும், ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். ரத்த சோகை உள்ளவர்கள் தினசரி சாத்துகுடி ஜூஸ் அருந்தலாம்.

குழந்தைகளின் வளர்ச்சிக்கும், பெரியவர்களின் எலும்புகளின் வலுவிற்கும் இன்றியமையாதது கால்சியம் சத்து. எனவே குழந்தைகள் தினசரி சாத்துகுடி ஜூஸ் அருந்த நல்ல வளர்ச்சி பெறுவர். பெரியவர்கள் மற்றும் பெண்களின் எலும்பு தேய்மானம் மற்றும் வலுவற்ற எலும்பிற்கு வலு சேர்க்க சாத்துகுடி ஜூஸ் சிறந்த பலனை தரும்.பெரியவர்களுக்கு ஞாபகமறதி என்பது பெரிய தொந்தரவாக உள்ளது. ஞாபக திறனை மேம்படுத்தி நினைவாற்றலுடன் செயல்பட சாத்துகுடி பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. பசி எடுக்கவில்லை என்பவர்களுக்கு சாத்துகுடி ஜூஸ் அருந்த கொடுக்க பசித்தீயை தூண்டி, உணவு உண்ண வகை செய்யும். அத்துடன் சீரான ஜீரண சக்தியை அளிப்பதுடன், மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளுக்கும் நல்ல தீர்வாக அமைகிறது. சாத்துகுடி பழமா? என சாதாரணமாக  கேட்கும் பலருக்கு, அதன் பெருமை தெரியவில்லை. சாத்துகுடி, சத்துகள் நிறைந்து சகல நோய்களை தீர்க்கும் சஞ்சீவினியாக திகழ்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad