Type Here to Get Search Results !

பிளாஸ்திரி தடுப்பூசி!




ஊசியின் வலிக்கு பயந்தே பலர் தடுப்பூசி போட்டுக் கொள்வதில்லை. மக்களின் இந்த சிரமத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக அமெரிக்காவிலுள்ள  ஜார்ஜியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புதிய உத்தி ஒன்றை இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்.

தடுப்பூசியின் மூலம் போடப்படும் மருந்தை காயம் பட்ட இடத்துக்கு போடப்படும் பிளாஸ்திரியின் உதவியோடு போட்டுக் கொள்ள முடியும் என்பதுதான் அந்த ஐடியா. இதற்கான பரிசோதனைகளை நடத்தியதோடு அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றனர். ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ள பிளாஸ்திரியில்  மிக நுண்ணிய பிளாஸ்டிக் ஊசிகள் இருக்கின்றன. அந்த ஊசிகளில் திரவ வடிவில் இல்லாமல், பொடிகளாக தடுப்பு மருந்து வைக்கப்படுகிறது.

பிளாஸ்திரியை கையில் ஒட்டிக்கொண்டால் சில நிமிடங்களில் ஊசி முனை கரைந்து மருந்துப் பொடி ரத்தத்தில் கலந்துவிடும். சமீபத்தில் இந்த  பிளாஸ்திரி மூலம் சிலருக்கு இன்ஃபுளூயென்சா தடுப்பூசிகளை போட்டுப் பார்த்ததில் பெரும்பாலானோர், இனிமேல் இதேபோல் தடுப்பு மருந்துகளை  போட்டுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். Plaster vaccine என்று செல்லமாகக் குறிப்பிடப்படும் இந்த புதிய முறை அறிமுகமானால் பல  நன்மைகள் கிடைக்கும் என்பதையும் நம்பிக்கையோடு தெரிவிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த முறையில் வலி துளியும் இருக்காது. மருந்து உடலில் கலந்ததும் பிளாஸ்திரியைக் குப்பையில் போட்டுவிடலாம். அதிலுள்ள நுண் ஊசிகளின்  முனை கரைந்துவிடும் என்பதால், இதன் குப்பையைத் தொடுவோருக்கு எந்த தொற்றும் ஏற்படாது. இது மட்டுமில்லை. பொடி வடிவில் தடுப்பு மருந்து  இருப்பதால் அவற்றைப் பாதுகாக்க குளிர்சாதனங்கள் ஏதும் தேவையில்லை. வளரும் நாடுகளில் தடுப்பூசி திட்டங்களுக்கு பிளாஸ்திரி வடிவ ஊசி  நிச்சயம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்று பிளாஸ்திரி தடுப்பூசியின் பலன்களைப் பட்டியலிடுகிறார்கள். நல்ல விஷயம்தான்!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad