Type Here to Get Search Results !

எடப்பாடி கூட்டிய அதிமுக பொதுக்குழு அதிரடி சசிகலா பதவி நீக்கம்: டிடிவி தினகரன் நியமனமும் செல்லாது என அறிவிப்பு





சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் எடப்பாடி தலைமையில் அதிமுக பொதுக்குழு சென்னையை அடுத்த வானகரத்தில் நேற்று நடந்தது. பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் சசிகலா,  துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோரின் நியமனங்களை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படும் வரை, தற்காலிகமாக சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றதால் சசிகலாவால் பொதுச்செயலாளராக செயல்படாத முடியாத நிலை ஏற்பட்டது. சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனை நியமித்ததுடன், அதிமுக கட்சியை அவரே தலைமை தாங்கி நடத்துவார் என்றும் அறிவித்தார்.

ஆனால் டி.டி.வி.தினகரனின் நடவடிக்கையில் அதிருப்தி அடைந்த முதல்வர் எடப்பாடி, அமைச்சர்கள் அவரை கட்சியில் இருந்து விலக்கி வைத்தனர். ஆனாலும், தினகரன், கட்சிக்கு நான் தான் தலைமை என்று கூறி, கட்சிக்கு விரோதமாக செயல்பட்டு வந்த பல்வேறு அமைச்சர்கள், நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தார்.

இந்நிலையில், அதிமுகவில் தனியாக செயல்பட்டு வந்த ஓபிஎஸ் அணியினர் எடப்பாடி அணியுடன் கடந்த மாதம் இணைந்தனர். அப்போது, விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டு, பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நியமனம் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நேற்று காலை 10.35 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள வாரு திருமண மண்டபத்தில் நடந்தது.  கூட்டத்துக்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். இதில் பங்கேற்க 2,140 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதில் 296 பேர் செயற்குழு உறுப்பினர்களாகவும் உள்ளனர். அழைப்பிதழ் இருந்தவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அழைப்பிதழ் அனுப்பப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. அதிமுக (அம்மா), அதிமுக (புரட்சி தலைவி அம்மா) என்று இரு அணிகளாக பிரிந்திருந்த நிலையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் லட்சியங்களை நிறைவேற்றவும், கருத்து வேறுபாடுகள் அனைத்தையும் புறந்தள்ளி, மீண்டும் ஒன்றுபட்ட ஒரே இயக்கமாக பணியாற்ற முடிவெடுத்திருப்பதை பொதுக்குழு அங்கீகரித்து ஒப்புதல் அளிக்கிறது.

2. அதிமுகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு ஜெயலலிதா நியமித்த அனைவரும் அவரவர் வகித்த பொறுப்புகளில் தொடர்ந்து செயல்படுவார்கள்.

3. எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டினை சிறப்பாக கொண்டாடி வரும் தமிழக அரசுக்கு பாராட்டு, நன்றி.

4. ஜெயலலிதா நினைவிடத்தில் மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், தமிழக அரசுக்கும் பாராட்டு.

5. வர்தா புயலால் தலைநகர் சென்னையும், திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. அப்போது அதிமுக அரசு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மிக சிறப்பாக செய்ததற்கு பாராட்டுக்கள்.

6. ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு கட்சியையும், ஆட்சியையும் சிறப்புற வழி நடத்தி செல்லும் அதிமுக முன்னோடிகளுக்கு பொதுக்குழு தனது பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

7. ஜெயலலிதாவின் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சியும், கவலையும் நிறைந்த சூழ்நிலையில் 29.12.2016 அன்று கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அன்றாட பணிகளை மேற்கொள்ள வி.கே.சசிகலா அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். 29.12.2016 அன்று சசிகலா நியமிக்கப்பட்டதை ரத்து செய்வதோடு, சசிகலாவால் 30.12.2016 அன்று முதல் 15.02.2017 வரை மேற்கொண்ட நியமனங்கள், நீக்கங்கள், சேர்த்தல்கள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லாது.

8. அதிமுகவின் நிர்வாக அமைப்பை சீர்குலைக்கும் நோக்கிலும் அதிமுக சட்டதிட்ட விதிகளின்படி நியமனம் செய்யப்படாதவரும், அதிமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லாதவருமான டி.டி.வி.தினகரன் அதிமுக நிர்வாகிகளை நீக்குவது மற்றும் புதிதாக நியமிப்பது குறித்து வெளியிடும் எந்த ஓர் அறிவிப்பும் செல்லத்தக்கதல்ல, அவை அதிமுக சட்டதிட்ட விதிகளுக்கு ஏற்புடையவையும் அல்ல.

9. அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களால், அதிமுக அமைப்பு தேர்தல் மூலம், ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

10. அதிமுக அமைப்பு தேர்தல் நடைபெறும் வரை பொருளாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், தலைமை நிலைய செயலாளரும்,

11. சேலம் புறநகர் மாவட்ட செயலாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட பொதுக்குழு ஒப்புதல் அளிக்கிறது. இவர்கள் முழுமையாக கட்சியை வழிநடத்துவார்கள்.

12. துணை ஒருங்கிணைப்பாளராக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் நியமிக்கப்பட பொதுக்குழு தீர்மானிக்கிறது. மேலும், அதிமுக வழிகாட்டுக்குழு ஒன்று அமைக்கவும் பொதுக்குழு தீர்மானிக்கிறது என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக அதிமுக உறுப்பினர்கள் 125 பேர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழு உறுப்பினர்கள் உற்சாகம்
அதிமுக பொதுக்குழு கூட்டம் தொண்டர்களின் அதிக எதிர்பார்ப்போடு நேற்று நடந்தது. பொதுக்குழுவுக்கு அழைக்கப்பட்ட 2,140 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதனால் முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் உற்சாகம் அடைந்தனர். பொதுச்செயலாளர் சசிகலா நியமனம் ரத்து மற்றும் சசிகலாவால் நியமிக்கப்பட்ட அதிமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் நியமனம் ரத்து என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் பொதுக்குழுவில் வாசிக்கப்பட்டது. அப்போது, கூடி இருந்த பொதுக்குழு உறுப்பினர்கள் நீண்ட நேரம் கைத்தட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தியும், சத்தமாக குரல் எழுப்பியும் தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

குடகு சொகுசு விடுதியில் தமிழக போலீசார் சோதனை: பெங்களூரு: தினகரன் ஆதரவு  எம்.எல்.ஏக்கள் 19 பேர்  குடகு மாவட்டம் சோமவார்பேட்டையில் தனியார் சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர்.  ரிசார்ட்டில் தமிழக போலீசார் நேற்று அதிரடியாக வந்திறங்கினர். விடுதிக்குள் சென்று   சோதனை நடத்தியுள்ளனர். போலீசார் வெளியே பாதுகாப்புக்கு நிற்க, விடுதிக்குள் உயர் போலீஸ் அதிகாரிகள் சென்றனர்; அங்கு எம்எல்ஏக்களிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. 2 எம்எல்ஏக்கள் அவர்களுடன் சென்றதாக முதலில் தகவல் பரவியது; ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. பாப்பிரெட்டிபட்டி எம்.எல்.ஏ பழனியப்பன் மீது ஒப்பந்ததாரர் சுப்பிரமணி தற்கொலை வழக்கில் தொடர்பு  இருப்பதாக புகார் உள்ளது. எனவே அவரிடம் விசாரணை நடத்தவே போலீசார் வருகை தந்ததாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது. ரிசார்ட்டில் விசாரணையை மேற்கொண்ட அதிகாரிகள், செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad