Type Here to Get Search Results !

தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்: சபாநாயகர் தனபால் நடவடிக்கை







சென்னை: முதல்வர் பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் தனபால் நடவடிக்கை எடுத்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், அவருக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுவதாகவும், வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உட்பட தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து மனு கொடுத்திருந்தனர்.

முதல்வருக்கு எதிராக மனு கொடுத்தது குறித்து செப்டம்பர் 15ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி 19 எம்எல்ஏக்களுக்கும் அவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த நிலையில், எம்எல்ஏ ஜக்கையன் மட்டும் சபாநாயகர் முன்பு ஆஜராகி, முதல்வருக்கு எதிராக மனு கொடுத்ததை திரும்பப் பெற்றுக்கொள்வதாகக் கூறி விளக்கம் அளித்தார்.

சபாநாயகர் அளித்த காலக்கெடுவுக்குள் நேரில் விளக்கம் அளிக்கத் தவறிய 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்வது குறித்து முதல்வர் பழனிசாமி, சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளிட்டோர், அவைத் தலைவர் தனபாலுடன் ஆலோசனை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


இந்திய அரசமைப்பு சட்டம் 10வது அட்டவணையின்படி ஏற்படுத்தப்பட்டுள்ள 1986ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களின் (கட்சி மாறுதல் காரணம் கொண்டு தகுதியின்மையாக்குதல்)  விதிகளின் கீழ், பேரவைத் தலைவர் கீழ்காணும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்கள் 18.9.2017 முதல் தகுதி நீக்கம் செய்து ஆணையிட்டதன் காரணமாக தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தவிட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி இழந்த 18 எம்எல்ஏக்களின் பட்டியலில்,

1. ஆண்டிப்பட்டி - தங்க தமிழ்செல்வன்
2. அரூர்  - முருகன்
3. மானாமுதுரை - கென்னடி மாரியப்பன்
4. பெரியகுளம் - கதிர்காமு
5. குடியாத்தம் - ஜெயந்தி பத்மநாபன்
6. பாப்பிரெட்டி - பி. பழனியப்பன்
7. அரவக்குறிச்சி - செந்தில் பாலாஜி
8. பரமக்குடி  - டாக்டர் முத்தையா
9. பெரம்பூர் -  வெற்றிவேல்
10. சோளிங்கர் -  பார்த்திபன்
11. திருப்போரூர் - கோதண்டபாணி
12. பூந்தமல்லி - டி.ஏ. ஏழுமலை
13. தஞ்சை -  ரெங்கசாமி
14. நிலக்கோட்டை - தங்கதுரை
15. ஆம்பூர் - ஆர். பாலசுப்ரமணி
16. சாத்துர் - எதிர்க்கோட்டை எஸ்.ஜி. சுப்ரமணியன்
17. ஒட்டப்பிடாரம் - ஆர். சுந்தரராஜ்
18. விளாத்திகுளம் - உமா மகேஸ்வரி

இந்த 18 பேரும், இன்று முதல் பேரவை உறுப்பினர் என்ற பதவியை, கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் இழந்துவிட்டனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும், தற்போது கர்நாடக மாநிலம் குடகு அருகே சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad