Type Here to Get Search Results !

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி ஜாதவ் தூக்கு தண்டனைக்கு தடை : பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச கோர்ட் உத்தரவு




தி ஹேக் : பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்தியர் குல்பூஷண் ஜாதவ்விற்கு மரண தண்டனை வழங்க சர்வதேச நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. இறுதி தீர்ப்பு வரும் வரையும் பாகிஸ்தான் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உளவு  பார்த்ததாக இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ்வை (46) 2016 மார்ச் 3ம்  தேதி பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்தனர். இந்திய உளவு அமைப்பான ‘ரா’ அமைப்புக்காக பணியாற்றியதாக அவர் மீது  பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் குற்றம் சாட்டி மரண தண்டணை விதித்தது. ஆனால் உளவுபார்த்ததாக கூறிய குற்றச்சாட்டை மறுத்த இந்தியா, ஜாதவ் கடற்படையில் இருந்து ஓய்வு பெற்று சொந்த தொழில் விஷயமாக ஈரான் சென்ற போது, அங்கிருந்து  பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்டதாக கூறியது.
இந்தியாவின் வாதத்தை பாகிஸ்தான் ஏற்கவில்லை. மேலும் தண்டனை ரத்து செய்யக்  கோரி தூதரகம் வாயிலாக விடுத்த கோரிக்கைகளையும் பாகிஸ்தான்  நிராகரித்தது. இதையடுத்து நெதர்லாந்தில் உள்ள ஐநா.வின் சர்வதேச நீதிமன்றத்தின்  கவனத்திற்கு ஜாதவ் விவகாரத்தை இந்தியா கொண்டு சென்றது. இந்தியாவின் மேல்முறையீட்டு  மனுவை பரிசீலித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண  தண்டனையை நிறைவேற்றுவதற்கு தடை விதித்து மே 9ல் உத்தரவிடப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட சர்வதேச நீதிமன்றம் நேற்று தனது தீர்ப்பை வழங்கியது. சர்வதேச நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த 11 நீதிபதிகளும் ஒரே மனதுடன் ஜாதவ்விற்கு விதிக்கப்பட்ட மரண தண்டணைக்கு தடை விதிப்பதாக உத்தரவிட்டனர். அந்த தீர்ப்பை சர்வதேச நீதிமன்ற தலைவர் ரோனி ஆபிராகிம் வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது: 1977ம் ஆண்டு வியன்னா ஒப்பந்தத்தை இந்தியா, பாகிஸ்தான் மதிக்க வேண்டும். வியன்னா ஒப்பந்தத்தில்,  தீவிரவாதம் மற்றும் உளவு பார்த்தல் தொடர்பான குற்றச்சாட்டில் கைது  செய்யப்பட்டவர்களை விலக்க வேண்டும் என குறிப்பிடப்படவில்லை. தூதரகம் மூலம் குல்பூஷன் ஜாதவை தொடர்பு கொள்ள இந்தியாவுக்கு உரிமை உள்ளது. தூதரக உதவி வழங்கவும் இந்தியாவுக்கு உரிமை உள்ளது. இது வியன்னா ஒப்பந்தத்தில் வருகிறது. ஜாதவுக்கு முறையான சட்ட நிபுணரின் உதவியைக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், பாகிஸ்தான் அப்படிச் செய்யவில்லை. ஜாதவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை போன்ற தொடர்பையும் பாகிஸ்தான் அனுமதிக்கவில்லை. இதை வைத்துப் பார்க்கும் போது இந்தியாவின் முறையீடு நியாயமானதுதான் என்று தெரிகிறது.

பாகிஸ்தான் தரப்பு வாதங்கள் ஏற்க முடியாதது. எனவே, இவ்வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பினை வழங்கும்  வரை ஜாதவின் மரண தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்கப்படுகிறது. இதனை  உறுதிப்படுத்த பாகிஸ்தான் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். அதனை சர்வதேச நீதிமன்றத்திற்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் இந்தியாவுக்கு சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் பெரும் வெற்றி கிடைத்துள்ளது. பாகிஸ்தானுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மோடி மகிழ்ச்சி

ஜாதவ் மரணதண்டணை நிறுத்தி வைக்கப்பட்ட தகவல் அறிந்தவுடன் பிரதமர் மோடி மகிழ்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக வௌியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஜாதவ் வழக்கில் அவர் எடுத்த முயற்சிகளையும், குறிப்பாக சர்வதேச நீதிமன்றத்தில் வாதிட ஹரிஷ் சால்வேயை நியமித்த நடவடிக்கையையும் அவர் பாராட்டினார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் வெங்கையாநாயுடு ஆகியோர் பாராட்டினர்.

இந்திய மக்களுக்கு நிம்மதி

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: குல்பூஷன் ஜாதவ் தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய மக்களுக்கும் நிம்மதி கிடைத்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் வாதத்தை சரியான முறையில் எடுத்து வைத்த ஹரிஷ் சால்வேவிற்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் நிராகரிப்பு

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலக செய்தி தொடர்பாளர் நபீஸ் சக்காரியா என்பர் துனியா டிவிக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “ பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் சர்வதேச நீதிமன்ற உத்தரவுகளை எல்லாம் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஜாதவ் இந்திய உளவாளிதான் என்பதற்கு தேவையான அனைத்து ஆதாரங்களையும் சர்வதேச நீதிமன்றத்தில் நாங்கள் சமர்ப்பிப்போம். இந்த விவகாரத்தில் எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் தீவிரவாதத்தை ஊக்குவிப்பது, நிதியுதவி செய்வது உள்ளிட்ட விஷயங்கள் வெளிப்படுவதை மனிதாபிமான பிரச்னையை முன்னிலைப்படுத்தி இந்தியா மறைத்து விட்டது. வியன்னா ஒப்பந்த விதி 36(2)ன் கீழ் சர்வதேச நீதிமன்ற உத்தரவை பாகிஸ்தான்  ஏற்றுக்கொள்ளாது” என்று தெரிவித்தார்.

இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும்

காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி கருத்து தெரிவித்துள்ளார். அவர்கூறும்போது,” சர்வதேச நீதிமன்றம் சாதகமான உத்தரவை வழங்கி உள்ளது. இதை பயன்படுத்தி ஜாதவ்வை உயிருடன் மீட்டு இந்தியா கொண்டு வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad