Type Here to Get Search Results !

ஜூஸ் குடிக்கப் போறீங்களா... ஒரு நிமிஷம்...




வசதி படைத்தவர்கள் தண்ணீரைக்கூடத் தரம் பார்த்துக் குடிக்கலாம். இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? கொளுத்தும் கோடையை சமாளிக்க, தெருவோரக் கடைகளில் விற்கப்படுகிற ஜூஸ், கூழ், பழங்கள்தான் அவர்களுக்கு ஆறுதல். இவை உடனடியாக அவர்களது தாகத்தையும் களைப்பையும் போக்கினாலும், பின்னணியில் உள்ள ஆபத்தை யாரும் உணர்வது இல்லை. வெயிலில் நீண்ட நேரம் வைக்கப்படும் எந்த உணவுப் பொருளிலும் கெட்டுப்போகும் தன்மை அதிகமாக இருக்கும் என்கிறார் பொதுநல மருத்துவர் அரசு மோகன்.

‘‘கோடைக்காலம் தொடங்கிவிட்டால் சாலையோரம் மற்றும் நடைபாதைகளில் ஃப்ரூட் ஜூஸ், லஸ்ஸி, ஃப்ரூட் சாலட், கரும்பு ஜூஸ், சர்பத், பனஞ்சாறு, கேழ்வரகுக் கூழ்,  தர்பூசணி,  ஐஸ்க்ரீம் போன்றவற்றின் வியாபாரம் அதிக அளவில் நடைபெறும்.
தாகம் தணிய வேண்டும் என்று அருந்தும் இந்த குளிர்பானங்களில் நோயைப் பரப்பும் காரணிகள் அதிகம் என்பது தெரியுமா
உங்களுக்கு?!இந்த குளிர்பானங்கள் பெரும்பாலும் திறந்த நிலையிலேயே விற்கப்படுகின்றன. இதனால் ஈக்கள், வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களின் தாக்கம் எளிதாக இருக்கும். ஏதோ பெயரளவுக்கு சிலர் கம்பி வலையால் மூடி வைக்கின்றனர். சிலர் பேப்பராலும்
மூடி வைக்கின்றனர்.

தள்ளுவண்டியில் ஜூஸ், லஸ்ஸி, ஐஸ்க்ரீம் போன்றவற்றை விற்பனை செய்பவர்கள் சுகாதாரமான தண்ணீரைப் பயன்படுத்துவது கிடையாது. ஒரு சிலர் சாலையோரம் பெரிய பெரிய பிளாஸ்டிக் தொட்டிகளில் பல நாட்களாக அடைத்து வைக்கப்பட்ட நீரையும் பயன்படுத்துகின்றனர். ஜூஸ் தயாரிக்க பயன்படுத்துகிற மிக்ஸி, பழங்களை அறுக்கிற கத்தி போன்றவற்றை ஒவ்வொரு தடவையும் நன்றாக தண்ணீரில் கழுவ வேண்டும். அதேபோல், பழங்களை மிக்ஸியில் போட்டு அரைக்கும் முன் சுத்தமான நீரில்
நன்றாக கழுவ வேண்டும். ஜூஸ் ஊற்றி கொடுக்கும் டம்ளர் போன்ற பாத்திரங்களையும் சுத்தமாக கழுவிய பின்னரே, அடுத்த முறை பயன்படுத்த வேண்டும். பெரும்பாலானோர் அவ்வாறு செய்வது கிடையாது.

மிக்ஸி, டம்ளர் போன்றவற்றை திறந்தவெளியில் வைப்பதால், அவற்றில் வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகை, தூசு, நோயைப் பரப்புகிற கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் நிரந்தரமாக தங்கவும் கூடும். ஃப்ரூட் சாலட் என்ற பெயரில் விற்கப்படும் பழவகைகள், நுங்கு போன்றவை பல மணி நேரத்துக்கு முன்பாகவே வெட்டப்பட்டு சரியாக சுத்தம் செய்யப்படாத கிண்ணங்களிலோ, கூடைகளிலோ சரியாக மூடப்படாமல் வைக்கப்படுகின்றன. இதுபோன்ற காரணங்களால் அவற்றில் தங்கியுள்ள தூசு மற்றும் கிருமிகள் நேரடியாக வயிற்றுக்குள் செல்லும் ஆபத்து இருக்கிறது. வெயிலில் நீண்ட நேரம் சுகாதாரமற்ற முறையில் வைக்கப்
படுகிற உணவுப்பண்டங்களில் நோயைப் பரப்புகிற வைரஸ், பாக்டீரியா விரைவில் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் வயிற்றுப்போக்கு அதன் காரணமாக ஏற்படும் நீர்ச்சத்து குறைதல், களைப்பு, மயக்கம் அடைதல் என பலவிதமான பாதிப்புக்கு ஆளாகின்றனர்.  

அதனால், முடிந்தவரை சாலையோர கடைகளில் ஜூஸ், லஸ்ஸி போன்றவற்றை தவிர்ப்பதே பாதுகாப்பானது. நீண்ட தூரம் பயணம் செய்யும் மார்க்கெட்டிங் துறையில் வேலை செய்பவர்கள், சிறுவர், சிறுமியருடன் கடற்கரை, உயிரியல் பூங்கா போன்ற இடங்களுக்குச் செல்பவர்கள் தண்ணீர், ஜூஸ், பழங்கள் போன்றவற்றை கையுடன் எடுத்துச் செல்வதே நல்லது. குடிக்கிற தண்ணீரை நன்றாகக் காய்ச்சி எடுத்து செல்ல வேண்டும். வெளியே செல்லும்போது எடுத்துச் செல்லும் பழங்கள், தண்ணீர் தீர்ந்துவிட்டால், தரமான கடைகளில்,  தரமான பழங்கள், நன்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஆகியவற்றை வாங்கி உபயோகிப்பது நல்லது.’’

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad