Type Here to Get Search Results !

ஐஸ்வர்யா ராய் படம் ரிலீசுக்கு போலீஸ் பாதுகாப்பு




காஷ்மீர் மாநிலம் உரி பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய திரைப்படங்களில் பாகிஸ்தான் நடிகர்கள் நடிப்பதற்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியது. எனவே, நடிகர் ரன்பீர் கபூர், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா ஆகியோரது நடிப்பில் தயாரான ‘ஏ தில் ஹை முஷ்கில்’ படம் திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  ஏனென்றால், பாகிஸ்தான் நடிகர் பவாத் கான் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். ஆனாலும், இந்த படத்தை வருகிற 28-ந்தேதி திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் தீவிரம் காட்டி உள்ளனர்.  இதற்கு ராஜ் தாக்கரே தலைமையிலான மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மீறி திரையிட்டால், தியேட்டர்களை அடித்து நொறுக்கி சூறையாடுவோம் என்று அக்கட்சி மிரட்டல் விடுத்தது.  இதனால், படக்குழுவினர் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இந்த நிலையில், இந்த படத்தை இயக்கிய இயக்குனர் கரண் ஜோகர், தயாரிப்பாளர் முகேஷ் பட் மற்றும் விஜய் சிங் ஆகியோர் நேற்று மும்பை போலீஸ் கமிஷனர் தத்தா பட்சல்கிகர், இணை கமிஷனர் (சட்டம் – ஒழுங்கு) தேவன் பார்தி ஆகியோரை சந்தித்து, படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை மனு கொடுத்தனர்.  மனுவை ஏற்றுக் கொண்ட போலீஸ் அதிகாரிகள், “சினிமா தியேட்டர்களுக்கு மும்பை போலீஸ் போதிய பாதுகாப்பு அளிக்கும்” என்று உறுதியளித்தனர்.  இருந்தாலும், பாகிஸ்தான் நடிகர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் மராட்டிய நவநிர்மாண் சேனா உறுதியாக இருக்கிறது.  போலீஸ் கமிஷனரிடம் படக்குழுவினர் புகார் அளித்தது பற்றி கருத்து கூறிய அக்கட்சியின் திரைப்பட பிரிவு நிர்வாக தலைவர் ஷாலினி தாக்கரே, “படம் வெளியாவதற்கு வேண்டுமானால் படக்குழுவினர் பாதுகாப்பு பெறலாம். ஆனால், பாகிஸ்தான் நடிகர்களை திரையில் கண்டதும், ரசிகர்களின் ஆத்திரத்தை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.  இதேபோல், பாகிஸ்தான் நடிகர்கள் இடம்பெற்ற படங்களை வெளியிடும் தியேட்டர்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்குவோம் என்று நவநிர்மாண் சேனா திரைப்பட பிரிவு தலைவர் அமேய் கோப்கர் கூறினார்.  இதைத்தொடர்ந்து, முகேஷ் பட் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “சில சமயங்களில் எங்களுக்கும், நவநிர்மாண் சேனாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஆனால், நாங்கள் சகோதரர்கள். அமைதியாக செல்லுமாறு என் சகோதரர்களிடம் தான் என்னால் முறையிட முடியும்” என்று உருக்கமாக கூறினார்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad