Type Here to Get Search Results !

கிரிக்கெட் தொடருக்காக இந்தியாவிடம் கெஞ்சுவதை நிறுத்துங்கள்; பாகிஸ்தான் வாரியத்திற்கு அப்ரிடி வேண்டுகோள்








கிரிக்கெட் தொடருக்காக இந்தியாவிடம் கெஞ்சி கூத்தாடுவதை நிறுத்தும்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு அப்ரிடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிரிக்கெட் தொடர்

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே டிசம்பர்-ஜனவரி மாதங்களில் பொதுவான இடமான ஐக்கிய அரபு அமீரகத்தில் கிரிக்கெட் தொடர் (2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டி) நடத்த திட்டமிடப்பட்டது. இந்த தொடர் நடந்தால் மோசமான நிதிநிலைமையில் தவிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ‘தலைநிமிர்ந்து’ விடும்.

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபடி இந்த போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கெஞ்சிக்கொண்டிருக்கிறது. இதற்காக அந்த நாட்டைச் சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜாகீர் அப்பாசும் தூது அனுப்பப்பட்டார். ஆனால் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதால், இப்போதைக்கு பாகிஸ்தானுடன் கிரிக்கெட் உறவு இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

அப்ரிடி பேட்டி

இந்த நிலையில் மறுபடியும் கிரிக்கெட் உறவை தொடர பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்தியாவிடம் தொடர்ந்து முறையிடுவது பாகிஸ்தான் 20 ஓவர் அணியின் கேப்டன் சாகித் அப்ரிடிக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அவர் இது தொடர்பாக நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தியாவுக்கு எதிரான தொடருக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீண்டும்...மீண்டும் ஏன் போராடுகிறது என்பது எனக்கு தெரியவில்லை. அவர்களுக்கு (இந்தியா) நம்முடன் கிரிக்கெட் விளையாட விருப்பம் இல்லை என்றால், நமக்கும் அவர்களுடன் விளையாடுவதற்கு எந்த அவசியமும் இல்லை.

நாம் அவர்களுக்கு முறைப்படி அழைப்பு விடுத்தோம். அவர்களுக்கு நம்முடன் விளையாட விருப்பம் இல்லை என்றால், அதனால் எந்த கவலையும் இல்லை. இந்தியாவுடன் விளையாடாவிட்டாலும் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம்.

பிற அணிகளை அழையுங்கள்

இந்திய அணியை பாகிஸ்தான் எப்போதும் வரவேற்கிறது. கடைசியாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, இப்படியொரு வரவேற்பை உலகின் வேறு எந்த அணிக்கும் பார்த்து இருக்க முடியாது. கடினமான நேரங்களில் இந்தியாவுக்கு நாங்கள் ஆதரவு அளித்து இருக்கிறோம். ஆனால் இது அவர்களின் அரசாங்கத்தின் முடிவை பொறுத்தது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட் களத்தில் மோதுவதை இரு நாட்டு ரசிகர்களும் பார்க்க ஆவலுடன் இருக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அப்படி இவ்விரு நாடுகளும் மோதினால், அது ஆஷஸ் போட்டியை விட மிகப்பெரிய தொடராக அமையும்.

ஆனால், இந்திய அணி விளையாட தயாராக இல்லை என்றால், பிற வெளிநாட்டு அணிகளை இங்கு வந்து விளையாட வைக்க நாம் முயற்சி மேற்கொள்வதே நல்லது.

இவ்வாறு அப்ரிடி கூறினார்.

பாகிஸ்தான் சூப்பர் லீக்

பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுவதால், வெளிநாட்டு அணிகள் அங்கு செல்ல மறுக்கின்றன. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்பட உள்ள முதலாவது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் கத்தார் தலைநகர் டோகாவில் நடக்கிறது.

இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அப்ரிடி, ‘நமக்குரிய கிரிக்கெட் போட்டிகள் நமது நாட்டில் தான் நடத்தப்பட வேண்டும். பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியை பாகிஸ்தானில் நடத்துவதே சிறப்பாக இருக்கும். அது மட்டுமின்றி பாகிஸ்தான் மண்ணில் சர்வதேச போட்டிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வெளிநாட்டு வீரர்கள் இங்கு வந்து ஆடுகிறார்களா? இல்லையா? என்பது பற்றி எனக்கு கவலையில்லை. பாகிஸ்தானில் கிரிக்கெட் புத்துயிர் பெற வேண்டும், உள்ளூர் ரசிகர்களின் மத்தியில் நமது இளம் வீரர்களுக்கு போதுமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது தான் முக்கியம்.

நான் சில வெளிநாட்டு வீரர்களிடம் பேசிய போது, அவர்கள் பாகிஸ்தான் வந்து விளையாட தயாராக இருப்பதாக கூறினார்கள். பெரிய தொகையை கொடுத்தால் அவர்கள் ஏன் இங்கு வரமாட்டார்கள்?’ என்றார்.









Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad