Type Here to Get Search Results !

சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதியில் ரியல் மாட்ரிட், ஜுவென்டஸ்












சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இரண்டாவது கட்ட காலிறுதியில், கடைசிக் கட்டத்தில் ஜேவியர் ஹெர்னாண்டஸ் கோல் அடித்து உதவ, நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் 1-0 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு காலிறுதியில், மொனாக்கோவைத் தோற்கடித்து ஜுவென்டஸ் அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.

மாட்ரிட் டெர்பி என்றழைக்கப்படும் அட்லெடிகோ, ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையிலான முதல் காலிறுதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது கட்ட காலிறுதி ரியல் மாட்ரிட் அணியின் சொந்த மைதானத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

ரியல் மாட்ரிட் அணியின் கரீம் பென்ஸிமா, கேரத் பேல், மார்செலோ, லூகா மோட்ரிச் ஆகிய முன்னணி வீரர்கள் காயம் உள்ளிட்ட காரணங்களால் பங்கேற்கவில்லை. இதனால், அட்லெடிகோ ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

கேரத் பேல், பென்ஸிமா ஆகியோர் இல்லாதது முதல் பாதியில் தெளிவாகத் தெரிந்தது. குறிப்பாக, நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு சரியான நேரத்தில் பாஸ் கிடைக்கவில்லை. அரிதாகக் கிடைத்த வாய்ப்புகளையும் ரொனால்டோவும், ஹெர்னாண்டஸூம் வீணடித்தனர். இதற்கு அட்லெடிகோவின் ஜுவான்ஃப்ரன் பின்களத்தில் வலு சேர்த்ததும், முந்தைய ஆட்டத்தைப் போலவே இந்த முறையும் கோல் கீப்பர் ஜான் ஓப்லக் அபாரமாக கோல்களைத் தடுத்ததுமே காரணம். இதனால் முதல் பாதி முடிவில் 0-0 என்ற நிலை நிலவியது.

இரண்டாவது பாதியில், அட்லெடிகோ அணி சார்பில் அதிக கோல்களை அடித்துள்ள கிரீஸ்மனை பயிற்சியாளர் டீகோ சைமன், பெஞ்சுக்கு அழைத்தது ஆச்சரியமளித்தது. அடுத்த சிறிது நேரத்தில், ரியல் மாட்ரிட் வீரர் செர்ஜியோ ரமோஸூடன் மோதலில் ஈடுபட்ட அர்டா டியூரனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஏற்கெனவே அவர் எச்சரிக்கப்பட்டிருந்ததால், உடனடியாக நடுவர் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றினார்.

இதனால் அட்லெடிகோ 10 வீரர்களுடன் ஆடியது. ஆட்டம் முடிவதற்கு இரண்டு நிமிடங்களே இருந்தபோது, சுதாரிப்புடன் செயல்பட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ அழகாக, ஹெர்ணான்டஸூக்கு பாஸ் கொடுத்தார். இந்த முறை தவறேதும் செய்யாமல் நேர்த்தியாக அவர் கோலடிக்க, மைதானமே துள்ளிக் குதித்தது.

முடிவில் ரியல் மாட்ரிட் 1-0 என வெற்றி பெற்றது.

முன்னணி வீரர்கள் இல்லாமல் களமிறங்கிய ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றதற்கு பயிற்சியாளர் ஏன்சலட்டியின் நுண்ணறிவும் காரணம். பின்கள வீரரான ரமோûஸ நடுகளத்தில் ஆட வைத்தது அதில் ஒன்று. மொனாக்கோவில் நடைபெற்ற ஜுவென்டஸ் - மொனாக்கோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்தது. முதற் கட்ட காலிறுதியில் ஜுவென்டஸ் 1-0 என வெற்றி பெற்றிருந்ததால், அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad