Type Here to Get Search Results !

அரசின் பயன்களைப் பெற 'ஆதார் அட்டை' கட்டாயமில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு








                  அரசின் பயன்களைப் பெற ஆதார் அட்டை கட்டாயமில்லை என்ற தனது முந்தைய உத்தரவைப் பின்பற்றிச் செயல்படுமாறு மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆதார் அட்டைகள் கட்டாயம் என்று சில மாநில அரசுகள் முடிவு செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுமீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி செலமேஸ்வர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்ரமணியம் கூறுகையில், "உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகும் கூட, திருமணப் பதிவு போன்றவற்றுக்கு ஆதார் அட்டை வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்; இது கவலையளிக்கும் விஷயமாகும்" என்றார்.

இது குறித்து நீதிபதிகள் கூறியதாவது:-

ஆதார் அட்டை கட்டாயம் தேவை என்று பொதுமக்கள் வலியுறுத்தப்பட்ட சம்பவங்கள் குறித்து எங்கள் கவனத்துக்கும் வந்தது. எனினும், அரசின் பயன்களைப் பெற ஆதார் அட்டை கட்டாயமில்லை என்ற உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை மத்திய, மாநில அரசுகளும், அவற்றின் அமைப்புகளும் பின்பற்றிச் செயல்பட வேண்டும். இந்த விஷயத்தில் அரசு எந்தக் காரணமும் கூறித் தப்பிக்க முடியாது" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் கூறுகையில், "இது குறித்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதும்; உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றிச் செயல்படுமாறு அனைத்து மாநில அரசுகளும் கேட்டுக் கொள்ளப்படும்" என்று கூறினார்.

முன்னர், ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்குவது, திருமணம், சொத்து போன்றவற்றைப் பதிவு செய்வது உள்பட பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆதார் அட்டைகள் கட்டாயம் என்று சில மாநில அரசுகள் முடிவு செய்தன.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி செலமேஸ்வர் தலைமையிலான அமர்வு, கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி ஓர் உத்தரவைப் பிறப்பித்தது.

அந்த உத்தரவில், "ஆதார் அட்டைகள் கட்டாயம் என்று சில மாநில அரசுகள் சுற்றறிக்கை வெளியிட்டபோதிலும், ஆதார் அட்டை பெறாததற்காக எந்த நபரும் பாதிக்கப்படக் கூடாது. ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கக் கூடாது" என்று அந்த உத்தரவில் நீதிபதிகள் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad